அரும்பு(சிறுகதை)
சந்தோஷ் ஆபீஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தான். அவன் ஊரில் இருந்து திரும்புவதற்குள் மனைவி ரூபா அவனிடத்தில் கைபேசியில் பேசிக்கொண்டு இருப்பாள். அப்படி பேசும்போதெல்லாம், " பக்கத்து வீட்டுக்கு ஒரு அக்கா குடித்தனம் வந்து இருக்கிறார்கள். அவங்க நல்லா பழகுறாங்க, அருமையான குணம், எது சமைத்தாலும் நமக்கு கொடுக்கிறார்கள். அந்த அக்கா சமையல் மிகவும் நல்லாயிருக்கு" என்று சொல்லி அக்கா புராணம்தான் பாடுவாள்.
சந்தோஷ் காது கொடுத்து கேட்கிறானோ இல்லையோ ரூபா சொல்லிமுடித்து விடுவாள். அன்று அவன் அலுவலகத்தில் இருந்து வீடு வருவதற்கு சற்று முன்புதான் பக்கத்துக்கு வீட்டு அக்கா கொழக்கட்டையும் அவுல் பாயசமும் கொடுத்து விட்டு போயிருந்தாள்.
அவன் வீட்டில் உள்ளே நுழைந்ததும் ஹாலின் தரையில் மல்லி அரும்பு கிடந்தது. சந்தோசுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்தான். ரூபா மல்லி பூவை தலையில் வைக்க மாட்டாள். மல்லி வாசனையென்றால் தலை வலிக்கும் என்பாள்.
அடுத்துவந்த இரண்டு நாள்களும் மல்லி அரும்பு ஹாலில் கிடந்தது. சந்தோஷின் முகம் சற்று மாறியது மட்டும் அல்லாது ஒரு தேடல் "அவளா? " இருக்குமோ என்ற மன ஓட்டம் ஓடியது. மல்லியின் அரும்பை பார்த்ததும் பழைய காதல் ஊற்று எடுத்தது. சே..சே...இது என்ன 50 வயதிற்கு மேல் தனக்குள் பேசிக் கொள்வான். இதுவரை அப்ப....அப்ப ....வந்து போய்க்கொண்டிருந்த நினைவுகள் அரும்பை பார்த்ததும் தூக்கம் தொலைந்து போனது.
ரூபா அந்த அக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தது சந்தோஷின் காதும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. “உங்களுக்கு மட்டும் மல்லி அரும்பாக எப்படி கிடைக்கிறது?" ரூபா பக்கத்து அக்காவிடம் கேள்வி எழுப்பினாள். வெட்கம் கலந்த சோக முகத்தோடு சிரித்துக்கொண்டு அது ஒரு நினைவு சின்னம் என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். "அரும்பு அவருக்கு ரொம்ப பிடிக்குனும் தேடித் பிடித்து அரும்பு வாங்கி வருவேன். இது அந்த வீட்டிலில் இருந்து வரும்போது கொண்டு வந்த மல்லி செடி " பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் பக்கத்து வீட்டு அக்கா.
அவள் ரூபா வீட்டிற்குள் வந்து போகும் போதுயெல்லாம் ஒரு அரும்பவது தெரிந்தோ தெரியாமலோ கீழே தரையில் கிடக்கும். அன்றும் அப்படித்தான் தரையில் இருந்த அரும்பை கையில் எடுத்து வைத்துக் கொண்டு எதையோ யோசித்தவாறு அமர்ந்து இருந்தான்.
அவனின் கனவை கலைத்த மாதிரி "ரூபா" என்று குரல் கொடுத்தவாறு பக்கத்து வீட்டு அக்கா வீட்டிற்குள் வந்தாள். அவனைப் பாத்ததும் கண்கள் வியப்பில் ஆழ்ந்தது. மின்னல் அடித்த பிரகாசம் அவனுக்குள். சந்தோஷ் நினைத்தது போல் அது "சுவாதி"தான். ஒரு நிமிடம் அந்த இடத்தில் அமைதி. இருவரின் கண்களும் நேரில் சந்தித்துக் கொண்ட போது கண்ணீர் துளிகள் கீழே விழாதவாறு பாத்துக் கொண்டார்கள். உள்ளே வந்த சுவாதி உடனே திரும்பி விட்டாள்.
அன்று அவளை பார்த்த பின் அவனால் இரவு முழுவதும் தூக்கமின்றி புரண்டு புரண்டு வந்தான். "இனி எப்படி தினம் தினம் சந்திக்க முடியும்? கடவுளே! இது என்ன சோதனை? என் சுவாதி என் அருகில் இருக்க வேண்டியவள் பக்கத்து வீட்டு அக்காவாக? " என மனதிற்குள் நினைத்து வரும் அழுகையை அடக்கிக் கொண்டான். பழைய நினைவுகளை நினைத்து பொழுது விடிந்து விட்டது. அவளுக்கும் அப்படிதான் இருந்து இருக்கும்.
சந்தோஷ் சுவாதி இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் விரும்புவது அவர்கள் கண்ணில் தெரியும்.ஆனால் அவர்களின் விருப்பத்தை சொல்லிக்கொள்ளவில்லை. இருவரும் பார்த்து சிரித்தப்படியே கடந்துப் போவார்கள்.
அவன் தனியாக போனாலும் நண்பர்களுடன் நடந்து போனாலும் அவன் கவனிக்காத போது, சுவாதி அவளது தலையில் வைத்து இருக்கும் மல்லி அரும்பை தூக்கி அவன் மேல் போடுவாள். அவன் திரும்பிப் பார்த்து அவளது குறும்பை ரசித்து சிரிப்பான். ஒரு நாள் அப்படிதான் அவள் தூக்கிப் போட்ட அரும்பு அவனது சட்டை பையில் விழுந்து இருந்தது.
இரவு முழுவதும் அரும்பை கையில் வைத்துக் கொண்டு கற்பனையில் தூங்காத நாள்களும் உண்டு. சந்தோசுக்கு மல்லி பூவின் வாசனை பிடிக்கும்னு அவன் நண்பர்களிடம் சொல்லியதை சுவாதி கேட்டதுண்டு. தனக்கு ஒரு வேலை கிடைத்தப்பின் சுவாதியிடம் தன் காதலை சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்குச் அப்பா அம்மாவுடன் சென்று பெண் கேட்கலாம் என எண்ணி இருந்தான்.
அதற்குள் எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டது. இப்பொழுது ஐம்பது வயது கடந்து இருவரையும் சந்திக்க வைத்து இருக்கிறது.
அன்று சுவாதி தனது 1 வயது பேத்தியை தூக்கிக் கொண்டு மாடி படி இறங்கி வரும்போது இருவரும் சந்திக்க நேர்ந்தது. 30 வருடத்துக்கு முன்னே விழுந்த மாதிரியே அவன் மேல் அரும்பு விழுந்த உணர்வோடு திரும்பி பார்த்தான். அப்படி திரும்பி பார்க்கும்போது அவன் முகத்தில் சிரிப்புடன் சோகமும் கலந்து இருந்தது.
வீட்டில் போய் சட்டையை கழற்றும் போது, அவன் சட்டைப் பையில் அரும்பு இருந்தது. இது இவள் வேலையா இருக்குமோ என்று நினைத்து கொண்டான். சே....சே....இந்த வயதிலா…? மனதிற்குள் சொல்லி கொண்டான்.
கல்லூரியில் படிக்கும் காலங்களில் மாடி படிகளில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில்தான் குறிப்பாக இந்த மாதிரி வேலைகளை சுவாதி இவனிடத்தில் செய்வாள்.
அடுத்து வந்த நாள்களிலும் அவன் மேல் மல்லி அரும்பு விழவே அவள் குறும்பு இன்னும் குறையவில்லை கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்து திருப்பியவுடன் அவன் மேல் தூக்கி வீசியது அவள் கையில் தூக்கி வைத்து இருந்த பேத்திதான் என்பது தெரியவந்தது.
இப்பொழுதும் இருவர் முகத்தில் சோகம் கலந்த சிரிப்பு தெரிந்தது. இன்னும் விரியாத "அரும்பு" போல் அவர்கள் பேசிக்கொள்ளாமலே காதலுடன் கடந்து போய் கொண்டு இருக்கிறார்கள். “என்றும் காதல் அழிவதில்லை. நினைவுகள் என்றும் வாழும்"




கருத்துகள்